இலங்கையில் ஆண்டுதோறும் 1,500 முதல் 2,000 வரையான தொழு நோயாளர்கள் பதிவாவதாகவும், அவர்களில் சுமார் 12 வீதம் பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, மொரட்டுவ பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் அதிகளவான சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
உலக தொழு நோய் தினத்தை முன்னிட்டு, மொரட்டுவ பிரின்சஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வின் போதே இந்த விபரங்கள் வெளியிடப்பட்டன.
மொரட்டுவ பகுதியில் மிக அதிகளவான நோயாளர்களும் சிறுவர் பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து பிலியந்தலை, இரத்மலானை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அதிக பாதிப்புகள் உள்ளன.
மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்புகள் உள்ளன. அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 60 வீதம் பேர் ஆண்கள். அதிகப்படியான நோயாளர்கள் 25 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,282 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களில் 123 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களாவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழு நோய் என்பது ஒரு பாக்டீரியா தொற்றாகும். சிகிச்சை பெறாத ஒரு நோயாளி தும்மும் போது அல்லது இருமும் போது காற்றின் ஊடாக இது மற்றவர்களுக்குப் பரவுகிறது.
ஆரம்பத்தில் தோலில் மாற்றங்கள் ஏற்படும். உரிய சிகிச்சை அளிக்காவிடில் இது ஏனைய உறுப்புகளையும் பாதிக்கும். சிகிச்சை பெற்ற பின்னரும் சுமார் 8 வீத நோயாளர்கள் ஏதாவதொரு வகை அங்கவீனத்திற்கு உள்ளாகின்றனர் எனவும் ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழு நோய்க்கு மிகவும் பயனுள்ள மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன. சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளி மூலம் மற்றவர்களுக்கு இந்நோய் பரவாது.
சமூகத்தில் இந்நோய் குறித்து நிலவும் தேவையற்ற அச்சம் மற்றும் தவறான கருத்துக்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர்.
உங்கள் தோலில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய மாற்றங்கள் தென்பட்டால், அவற்றைத் தெளிவாகப் புகைப்படம் எடுத்து 0754088604 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலதிக தகவல்களுக்கு அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலையின் தோல் மருத்துவப் பிரிவு அல்லது வெளிநோயாளிப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.