தரமற்ற மருந்து விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசேட வைத்தியர் சமல் சஞ்சீவ முறைப்பாடு
பாக்டீரியா நச்சுத்தன்மை கொண்டதாக சந்தேகிக்கப்படும் Ondansetron ஊசி மருந்துகள் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் உற்பத்தி செய்யப்பட்டு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தற்போதைய அரச மருந்தக கூட்டுத்தாபனமே இதனை முன்னெடுத்துள்ளதால், இந்த கொள்முதல் பொறிமுறை குறித்து விரிவான விசாரணையை நடத்துமாறு கோரி, வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்தியர் சமல் சஞ்சீவ லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.
மேலும், நாட்டிற்கு மருந்துகளை இறக்குமதி செய்யும் அல்லது உள்நாட்டில் உற்பத்தி செய்யும் சில நிறுவனங்களின் மருந்து தரம் குறைந்துள்ளதாக ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள் கண்டறியப்பட்ட போதிலும், அந்த நிறுவனங்களுக்கும் அவற்றின் உள்நாட்டு முகவர்களுக்கும் தொடர்ந்தும் அனுமதி வழங்க மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான மருந்துகளைப் பயன்படுத்தியதால் நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் தற்போதைய நிர்வாக சபை தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு அவர் மேலும் கோரியுள்ளார்.
சமீபத்தில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட மேலும் ஒன்பதுக்கும் மேற்பட்ட மருந்துகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு பல மாதங்கள் கடந்தும், அரச மருந்தக கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவு என்பன அவற்றை பொறுப்பேற்காமல் முறையற்ற விதத்தில் களஞ்சியப்படுத்தியதால் நாட்டுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் நிலவுகிறது. எனவே இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தரமற்ற மருந்துப் பிரச்சினை முதன்முதலில் எழுந்தபோது, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் விசேட வைத்தியர் தேதுணு டயஸ் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. எனினும், அக்குழுவின் அறிக்கை இன்று வரை இரகசியமாகவே வைக்கப்பட்டிருப்பதாக சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
தற்போதைய சுகாதார அமைச்சரும் அதே விசேட வைத்தியரின் தலைமையிலேயே மீண்டும் ஒரு குழுவை நியமித்துள்ளமை கேள்விக்குரியது எனச் சுட்டிக்காட்டிய அவர், வைத்தியசாலைகளில் ஏற்படும் சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.
பாக்டீரியா நச்சுத்தன்மை கொண்ட ஊசி மருந்துகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகி தற்போது இரண்டு வாரங்கள் கடந்த போதிலும், குறித்த மருந்து மாதிரிகள் சர்வதேச தரம் வாய்ந்த ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதா என்பதை சுகாதார அமைச்சர் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தவிர, அரச மருந்தக கூட்டுத்தாபனம் மற்றும் மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் ஊழல் மோசடி தொடர்பான தணிக்கை அறிக்கைகள், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தணிக்கை விசாரணைகள் மற்றும் மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபைக்காக தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தை அமைப்பதில் நிலவும் தாமதம் குறித்தும் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மருத்துவ வழங்கல் பிரிவின் தரவு அமைப்பு (Data system) தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்படாமை ஒரு பாரிய பிரச்சினையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தீவு முழுவதுமுள்ள பல வைத்தியசாலைகளில் மயக்க மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics), கண் அறுவை சிகிச்சைக்குப் பின் வழங்கப்படும் மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், குழந்தைகளின் வலிப்பு கட்டுப்பாட்டு மருந்துகள் மற்றும் சுவாச நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் மேலும் வெளிப்படுத்தியுள்ளார்.