BREAKING NEWS

“போரில் இடைத்தரகராக மாறமாட்டோம்”

PR
priya priya punidha in Latest Updates
Report
“போரில் இடைத்தரகராக மாறமாட்டோம்”

எம்மைப் போன்ற ஒரு நாடு எக்காரணம் கொண்டும் இவ்வாறானதொரு போரில் ஒரு இடைத்தரகராகவோ அல்லது இரையாகவோ மாறக்கூடாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


இன்று (04) முற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.


மேலும், ஒரு நாடாகத் தலையிடக்கூடிய எந்தவொரு வகையிலும், அதாவது ஒரு கோரிக்கையாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ தலையிட்டு, இந்தப் போர் மோதல்களை நிறுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.


“போரினால் உயிர்களை இழந்த அனைவருக்காகவும் நாங்கள் வருந்துகிறோம். அரச தலைவர்கள், இராஜதந்திரிகள், சாதாரண மக்கள், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் என எந்தத் தரப்பிலாவது பாதிக்கப்பட்டவர்களாக மாறி அவர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்காகவும் நாங்கள் கவலையைத் தெரிவிக்கிறோம். இந்த போர் மோதல்கள் விரைவில் முடிவடைய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும். மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வார்கள் என நாங்கள் நம்புகிறோம்.”


“இரண்டாம் உலகப் போரின் பின்னர் இவ்வாறான போர் மோதல்களை நிறுத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. நாங்கள் அந்த சர்வதேச நிறுவனங்களில் உறுப்பினர்களாக உள்ளோம். அந்த நிறுவனங்களுக்கும் தங்களது அதிகபட்ச பலத்தைப் பயன்படுத்தி இந்தப் போர் மோதல்களை நிறுத்துவதற்கான பொறுப்பு உள்ளது. புதிய தொழில்நுட்பம் மற்றும் இந்த அனைத்து விடயங்களுடனும், இது ஒரு புவியியல் எல்லைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது. அது எப்போது, எங்கு விரிவடையும் என்பதை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஒரு நாடாக நாங்கள் தலையிடக்கூடிய எந்தவொரு வகையிலும், கோரிக்கையாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ தலையிட்டு இந்த மோதல்களை நிறுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”


பெருமளவான இலங்கையர்கள் ஆபத்துக்குள்ளாகியுள்ளனர். உலகப் பொருளாதாரமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதை யார் ஆரம்பித்திருந்தாலும், இது இப்போது எந்தளவுக்கு விரிவடைந்திருந்தாலும், இது விரைவில் முடிவடையும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.


கேள்வி: ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அமெரிக்காவைக் கண்டு பயமா? ஈரான் தூதுவரும் இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு கோரியிருந்தார்….? மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைகள் மாறிவிட்டனவா?


அமைச்சரின் பதில்: “போர் ஒருபோதும் உலகிற்கு முன்னேற்றத்தைக் கொண்டுவரவில்லை. அரசியல் தேவைகளுக்கு மத்தியில் சாதாரண மக்களே பாதிக்கப்பட்டவர்களாக மாறினர். போரில் ஒரு பக்கத்தை ஆதரிக்க எவரும் முயற்சிக்கவில்லை. அது மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நிலைப்பாடு உங்களுடைய நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகாமல் இருக்கலாம். அது அரசாங்கத்தின் பிரச்சினை அல்ல. ஒரு நாடாக நாங்கள் இருக்கிறோம், அதாவது எங்களைப் போன்ற ஒரு நாடு இந்தப் போரில் இடைத்தரகர்களாகவோ அல்லது போரின் இரையாகவோ மாறக்கூடாது. எனவே, இந்தப் போர் மோதல்களைத் தவிர்ப்பதற்காக எங்கள் தரப்பில் சொல்லாலும் செயலாலும் செய்யக்கூடிய அனைத்தையும் செய்து வருகிறோம்.”