BREAKING NEWS

நானுஓயாவில் குப்பை நெருக்கடி! வீதியோரங்களில் தேங்கும் கழிவுகளால் மக்கள் அவதி.

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
நானுஓயாவில் குப்பை நெருக்கடி! வீதியோரங்களில் தேங்கும் கழிவுகளால் மக்கள் அவதி.

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானுஓயா – டெஸ்போட் கீழ் பிரிவில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குப்பைகள் அகற்றப்படாமல் வீதியோரங்களில் மலைபோல் தேங்கிக் கிடப்பதால், அப்பகுதியில் பாரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சுமார் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில், முறையான குப்பை குழிகள் அல்லது சேகரிப்புத் தொட்டிகள் இல்லாத காரணத்தால், பொதுமக்கள் வேறு வழியின்றி கழிவுகளை வீதியோரங்களிலேயே கொட்டி வருகின்றனர். இதனால் பாடசாலை மாணவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பாதசாரிகள் மூக்கைப் பொத்தியபடி செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

வீதியோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் மழைநீர் வடிகால்களை அடைத்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் வீதிகளில் வழிந்தோடி துர்நாற்றம் வீசுவதுடன், நுளம்புப் பெருக்கத்தினால் தொற்றுநோய்கள் பரவும் அச்சம் தோன்றியுள்ளது. மேலும், குப்பைகளில் உள்ள பொலித்தீன் கழிவுகளை உட்கொள்ளும் கால்நடைகள் நோய்வாய்ப்படுவதுடன் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்:

“ஐந்து வருடங்களுக்கு முன்னர் தோட்ட நிர்வாகத்தினால் குப்பைகளை மக்கச் செய்து உரமாக மாற்றும் முறை இருந்தது. ஆனால் இப்போது அத்தகைய வசதிகள் இல்லை. குப்பைத் தொட்டிகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. சில நேரங்களில் மர்ம நபர்கள் குப்பைகளுக்குத் தீ வைப்பதால் ஏற்படும் புகையினால் சுவாசம் சார்ந்த நோய்களும் ஏற்படுகின்றன. நகரங்களில் செய்வது போல மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்துச் சேகரிக்கும் முறையை இங்கும் அமல்படுத்த வேண்டும்,” என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

பொதுமக்களின் நலன் கருதி, நுவரெலியா பிரதேச சபை உடனடியாக தலையிட்டு, உடைந்த குப்பைத் தொட்டிகளை அகற்றிப் புதிய தொட்டிகளை வழங்க வேண்டும் எனவும், வீதியோரம் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கும் முறையை நடைமுறைப்படுத்தி இப்பகுதியைப் பாதுகாக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.