நேபாளத்தில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில், முன்னாள் ரெப் (Rap) பாடகரான பாலேந்த்ரா சாஹ் அடுத்த பிரதமராகத் தெரிவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான வாக்கு எண்ணும் பணிகளின் ஆரம்பகட்ட முடிவுகளின்படி, பாலேந்த்ரா சாஹ் தலைமையிலான தேசிய சுதந்திர கட்சி அமோக முன்னிலை பெற்றுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வரை தலைநகர் காத்மண்டுவின் மேயராகப் பதவி வகித்த இவர், இளைஞர்கள் மற்றும் மாற்றத்தை விரும்புவோரின் பலத்த ஆதரவைப் பெற்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சியின் ககன் தாப்பா போன்ற அரசியல் ஜாம்பவான்கள் இத்தேர்தலில் போட்டியிட்ட போதிலும், நேரடியாகத் தெரிவு செய்யப்படும் 165 ஆசனங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை சாஹ்வின் கட்சி கைப்பற்றியுள்ளதாக பி.பி.சி (BBC) செய்தி வெளியிட்டுள்ளது.
நேபாளத்தின் நிலப்பரப்பு மலைகள் நிறைந்து காணப்படுவதால், வாக்குச்சீட்டுகளைச் சேகரிக்க ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இறுதி முடிவுகள் வெளியாக அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.