வடகிழக்கு பருவமழையின் ஆரம்பம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 238 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 806 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மாவட்டமெங்கும் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், பாதிக்கப்பட்ட சமூகங்களை உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக பதுளை மாவட்டச் செயலாளர் பிரபாத் அபேயவர்தன குறிப்பிட்டார்.
பதுளை மாவட்டத்திலுள்ள பதினைந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் பதினான்கு பிரிவுகள் மண்சரிவு அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளன. கலுகல்ல பிரிவில் தீவிர மண்சரிவு அபாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 50 குடும்பங்களைச் சேர்ந்த 129 பேர் பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் உயர் அபாயப் பகுதிகளிலும் வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்வர்ணதோட்ட பிரிவில் 60
குடும்பங்களைச் சேர்ந்த 157 பேர் ஊவா பரணகம பிரிவில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர் றிதிமாலியத்த பிரிவில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேர் மீகாகியுல பிரிவில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேர் ஹாலி-எல பிரிவில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 87 பேர் எல்ல பிரிவில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயர் அபாய வலயங்களில் வசித்த குடியிருப்பாளர்கள் அனைவரும் நியமிக்கப்பட்ட பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில், வெளியேற்றும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.