நியூசிலாந்தின் வடக்குத் தீவில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, ஒரு சிறுமி உட்பட பலரைக் காணவில்லை என அஞ்சப்படுகிறது.
ஐந்து பிராந்தியங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மவுண்ட் மௌங்கனுய் பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகள் தங்கும் முகாம் ஒன்றில் வியாழக்கிழமை காலை மிகப்பெரிய மண்சரிவு ஏற்பட்டது.
அவசரகாலத் துறை அமைச்சர் மார்க் மிட்செல் இதனை விவரிக்கும்போது, “பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு போர் மண்டலத்தைப் போலக் காட்சியளிக்கின்றன” என்று கவலையுடன் தெரிவித்தார்.
முகாம் பகுதியில் மண்ணுக்குள் புதைந்தவர்களிடமிருந்து உதவி கோரும் குரல்கள் கேட்டதாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாயமானவர்களில் ஒரு சிறுமியும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வீடுகளின் கூரைகள் மீது தஞ்சமடைந்திருந்த குடும்பங்களை மீட்புப் படையினர் உலங்கு வானூர்திகள் மூலம் மீட்டு வருகின்றனர்.
மண்சரிவு ஏற்படுவதற்கு முந்தைய 30 மணிநேரத்தில் தவுரங்கா நகரில் மட்டும் 295 மி.மீ மழை பதிவாகியுள்ளது.