பங்களாதேஷ் அணிக்கு எதிரான தீர்மானமிக்க 3-ஆவது ஒருநாள் போட்டியில், கள நடுவர் குமார் தர்மசேன எடுத்த முடிவு விதிமுறைகளுக்கு முரணானது எனத் தெரிவித்து பாகிஸ்தான் அணி நிர்வாகம் போட்டி மத்தியஸ்தரிடம் உத்தியோகபூர்வமாகப் புகார் அளித்துள்ளது.
கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றி பெற 2 பந்துகளுக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது, ரிஷாத் ஹொசைன் வீசிய பந்தை நடுவர் குமார் தர்மசேன ‘வைட்’ (Wide) என அறிவித்தார். ஆனால், மைதானத்திலுள்ள பெரிய திரையில் (Big Screen) அந்தப் பந்து மட்டையை உரசிச் செல்வது போன்ற காட்சி வெளியான பின்னரே, பங்களாதேஷ் அணி ‘மதிப்பாய்வு’ கோரியதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
எவ்வித மறுஒளிபரப்பையும் பார்ப்பதற்கு முன்னரே 15 வினாடிகளுக்குள் ‘மதிப்பாய்வு’ கோரப்பட வேண்டும் என்பதே விதிமுறை. ஆனால், கால அவகாசம் முடிந்த பின்னரும், திரையைப் பார்த்துவிட்டு பங்களாதேஷ் எடுத்த முடிவை நடுவர் தர்மசேன அனுமதித்தது பாகிஸ்தான் வீரர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
மீளாய்வில் பந்து மட்டையில் பட்டது உறுதியானதால் ‘வைட்’ ரத்து செய்யப்பட்டது. இதனால் கடைசி பந்தில் 12 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஷாஹீன் அப்ரிடி ஆட்டமிழந்தார். இறுதியில் 11 ஓட்டங்களால் வெற்றி பெற்ற பங்களாதேஷ் 2-1 எனத் தொடரைக் கைப்பற்றியது. தோல்வியால் ஆத்திரமடைந்த அப்ரிடி தனது மட்டையை விக்கெட்டில் அடித்து அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
ஏற்கனவே இரண்டாவது போட்டியில் சல்மான் ஆகா ரன்-அவுட் செய்யப்பட்ட சர்ச்சையினால் கொதிப்பில் இருந்த பாகிஸ்தான் அணிக்கு, இந்தச் சம்பவம் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதோடு, சர்வதேச கிரிக்கெட்டில் நடுவர்களின் தரம் குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது.