பெண் உள்ளூராட்சி அரசியல்வாதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது முன்னாள் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரை (Personal Security Officer) சரீரப் பிணையில் விடுவிக்க குருநாகல் மேலதிக நீதவான் உத்தரவிட்டார். இராணுவத்தில் கோப்ரல் தரத்தில் பணியாற்றிய போகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டது.

சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போகமுவ பொலிஸார், சந்தேக நபர் குறித்த அரசியல்வாதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி கீர்த்தி துனுசிங்க இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்தார்.

தனது கட்சிக்காரருக்கும் முறைப்பாட்டாளருக்கும் இடையில் நீண்டகாலமாக இரகசியக் காதல் உறவு இருந்து வந்ததாகவும், சம்பவத்தன்று அவரது அழைப்பின் பேரில் தான் அவர் அந்த வீட்டிற்குச் சென்றதாகவும் சட்டத்தரணி விளக்கமளித்தார்.

அவர்கள் இருவரும் வீட்டில் இருந்தபோது, முறைப்பாட்டாளரின் கணவர் திடீரென அங்கு வந்துள்ளதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் தான் குற்றமற்றவர் என கணவரிடம் நிரூபிப்பதற்காக முறைப்பாட்டாளர் இந்தப் பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டைக் பொய்யாக இட்டுக்கட்டியுள்ளதாகவும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி மேலும் வாதிட்டார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை நிராகரித்ததுடன், அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

இலங்கை சினிமா