கொழும்பு – ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இலங்கையின் இளம் வீரர் பவன் ரத்நாயக்க அடித்த சதம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இவரது சிறப்பான ஆட்டத்தைக் கண்டு வியந்த இங்கிலாந்தின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட், பவன் ரத்நாயக்க சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கொண்டிருப்பதாகப் புகழ்ந்துள்ளார்.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் ஆட்டமிழக்காத 111 ஓட்டங்கள் மற்றும் ஹாரி ப்ரூக்கின் அதிரடியான 136 ஓட்டங்கள் உதவியுடன் 3 விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
கடினமான இந்த இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு, இளம் வீரர் பவன் ரத்நாயக்க தூணாக நின்று 121 ஓட்டங்களை விளாசினார். எனினும், ஏனைய வீரர்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.
இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியதுடன், 2022 ஆம் ஆண்டு முதல் சொந்த மண்ணில் ஒருநாள் தொடர்களில் இலங்கை தக்கவைத்திருந்த 12 தொடர் வெற்றிகள் என்ற சாதனை முடிவுக்கு வந்தது.
இந்தநிலையில், பவன் ரத்நாயக்கவின் ஆட்டம் குறித்து நேற்றைய போட்டியின் பின்னர் ஜோ ரூட் கூறுகையில், “அவர் மிகச்சிறப்பாக விளையாடினார்.
சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் அவர் மிகுந்த திறமைசாலி. பந்துகளை லாவகமாகக் கையாள்வதுடன், அதிக டொட் பந்துகள் (Dot balls) ஆடாமல் ஓட்டங்களைச் சேகரிக்கிறார். ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வதிலும், எல்லைக்கோட்டிற்குப் பந்துகளை அனுப்புவதிலும் அவர் கைதேர்ந்தவர்.”
மேலும், “அவருக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. அந்த ஆட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவருக்கு ஆதரவாக இன்னும் ஒரு சில வீரர்கள் நிலைத்து நின்றிருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும். இனி வரும் காலங்களில் நான் அவரைத் தொடர்ந்து கவனிப்பேன்,” என்றும் ஜோ ரூட் தெரிவித்தார்.
இதனிடையே, இந்தத் தொடர் முழுவதும் ஜோ ரூட் அபாரமான துடுப்பாட்ட திறன்களை வெளிப்படுத்தினார். மூன்று போட்டிகளிலும் முறையே 61, 75 மற்றும் ஆட்டமிழக்காத 111 ஓட்டங்களைக் குவித்து, ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிக்கான இங்கிலாந்தின் ஓட்டத்தில் தனது முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.