பெரும் பொருட்செலவில் நவீனமயமாக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி மக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் சொத்துக்களைச் சேதப்படுத்திய ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த வசதிகள் மற்றும் உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தது குறித்து, அதன் நலன்புரிப் பிரிவினர் புறக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், களனிப் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரை நேற்று (11) கைது செய்தனர். திருடப்பட்ட சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சேதங்கள் தொடர்பில் முழுமையான மதிப்பீட்டு அறிக்கையை வழங்குமாறு இலங்கை விமானப்படையிடம் கோரப்பட்டுள்ளது. கைதான சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.