இலங்கையில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை ஒரு ‘தேசிய நெருக்கடியாகக்’ கருதி, அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் அடிமட்டம் வரை சென்றடைய வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்குப் பலத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுத்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் புனர்வாழ்வு அளிப்பதற்கான 2026-2030 காலப்பகுதிக்கான தேசிய மூலோபாயத் திட்டம் குறித்த விசேட சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர், புதிய திட்டத்தின் செயலாக்கம் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.
போதைக்கு அடிமையானவர்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே வழங்குதல்.
புனர்வாழ்வு பெற்றவர்கள் மீண்டும் அந்தப் பழக்கத்திற்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய, சமூக அடிப்படையிலான தொடர் கண்காணிப்பு முறைகளை உருவாக்குதல்.
குறிப்பாக சிறுவர்கள், இளைஞர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறைக்கைதிகள் போன்ற ‘பாதிப்புக்குள்ளாகக் கூடிய’ பிரிவினர் மீது விசேட கவனம் செலுத்துதல்.
“போதைப்பொருள் அச்சுறுத்தல் என்பது இன்று குடும்பங்களின் சிதைவுக்கும், சமூகப் பாதுகாப்பின்மைக்கும் முக்கிய காரணமாக உள்ளது. எனவே, சட்டத்தை அமுல்படுத்துவதைப் போன்றே, பாதிக்கப்பட்டவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்,” என பிரதமர் வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரத்தில் ஊடகங்கள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.