‘டான்’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா மோகன். தற்போது, தனது திரையுலக வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தனக்கு எதிராக திட்டமிட்ட வகையில் ‘வெறுப்பு பிரச்சாரம்’ (Hate Campaign) நடந்ததாக அவர் முதன்முறையாக வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
பிரியங்கா மோகனின் இந்தக் குற்றச்சாட்டு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சுதீர் சீனிவாசனுடனான நேர்காணல் ஒன்றில் பங்கேற்றபோது இது குறித்து அவர் மனம் திறந்து பேசினார்.
நேர்காணலில் பிரியங்கா மோகன் கூறியதாவது:
“எனக்கு எதிராகத் திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இன்று சமூக வலைதளங்களில் எல்லோரும் எல்லோரையும் ‘ட்ரோல்’ செய்கிறார்கள். பழம்பெரும் நடிகர்கள் மற்றும் ஜாம்பவான் இயக்குநர்கள் கூட இன்று ட்ரோல் செய்யப்படுவதிலிருந்து தப்புவதில்லை. என் விஷயத்திலும் அப்படி பல கசப்பான சம்பவங்கள் நடந்தன. ஆனால் அந்த கடந்த காலத்தைப் பற்றி மீண்டும் பேசி அதற்குத் திரும்பிச் செல்ல நான் விரும்பவில்லை.”
தொடர்ந்து பேசிய அவர்:
“அந்தக் கடினமான காலம் என்னை ஒரு சிறந்த மனிதராக மாற்ற உதவியது. அதிலிருந்து நான் நிறையப் பாடங்களைக் கற்றுக்கொண்டேன். சினிமா துறை என்பது நிறைய நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த ஒரு தளம். இங்கே யாருக்கு வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம். ஆனால் ஒரு கடினமான கட்டத்தை நாம் சந்திக்கும்போது, அது நம்மை இன்னும் உயரத்திற்கு இட்டுச் செல்ல உதவும்,” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்