யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி (Prof. T. Velnampy) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வலிகாமம் கிழக்கு, புத்தூரைச் சேர்ந்த வேல்நம்பி, யாழ். பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக தற்போது பணியாற்றி வருகிறார்.

துணைவேந்தர் பதவிக்கான தேர்தலில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலிடம் வகித்த நிலையில், பல்கலைக்கழகப் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட மூவரில் இருந்து ஜனாதிபதி வேல்நம்பியை தெரிவு செய்துள்ளார்.
தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலம் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று (மார்ச் 25) முதல் பேராசிரியர் வேல்நம்பி புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

கடந்த மூன்று துணைவேந்தர் தேர்தல்களிலும் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவாகி வந்த பேராசிரியர் வேல்நம்பி, வணிக மற்றும் முகாமைத்துவத் துறையில் சர்வதேச தரம் வாய்ந்த ஆய்வுகளையும், நீண்டகால கல்விச் சேவையையும் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.