உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாத்திரம் நீட்டிக்கும் அரசாங்கத்தின் தற்போதைய நகர்வு, ஒட்டுமொத்த சட்டத்துறை மற்றும் அரச துறையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முன்மொழிவு அரசியலமைப்பின் 12(1) பிரிவுக்கு முரணானது என மூத்த சட்ட வல்லுநர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மேல் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற மற்றும் மஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் பணியாற்றும் 400-க்கும் மேற்பட்ட நீதிபதிகளின் தார்மீகப் பதவி உயர்வு எதிர்பார்ப்புகளை இந்த முடிவு சிதைக்கும் என கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் நிபுணத்துவ மருத்துவர்கள் என ஒட்டுமொத்த அரச துறையையும் இந்த ஓய்வு வயது மாற்றம் பாதிக்கும் என பேராசிரியர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் இவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்த அரசுகள், சட்டத்துறையின் எச்சரிக்கையை ஏற்று அவற்றை கைவிட்டதை நினைவுபடுத்திய அவர், அரசாங்கம் ஏன் இவ்வளவு அவசரமாக இந்தச் சட்டத் திருத்தத்தை முன்னெடுக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாகவே இவ்வாறான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசாங்கத்தின் இந்த ஒருதலைப்பட்சமான முடிவு சட்டத்துறையில் ஆரோக்கியமற்ற தாக்கங்களை ஏற்படுத்தும் என மீண்டும் எச்சரித்துள்ளனர்.