மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உலகளாவிய அமைதி மற்றும் சுபிட்சத்தை உறுதி செய்வதற்காக ‘PSOP’ (Peace, Stability, Order and Prosperity) எனும் சர்வதேச ரீதியிலான புதிய முன்னெடுப்பைத் தான் முன்மொழியவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரபல சர்வதேச ஊடகமான ‘இந்தியா டுடே’ (India Today) விற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது, தற்போதைய உலகளாவிய மோதல்கள் குறித்து அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இதன்போது, அமைதி, ஸ்திரத்தன்மை, ஒழுங்கு மற்றும் சுபிட்சம் ஆகிய நான்கு தூண்களைக் கொண்ட தனது ‘PSOP’ திட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார்.
“முக்கியமான புவியியல் அமைவிடங்களைக் கொண்ட பகுதிகளைப் பாதுகாப்பதற்கும், அங்கு அமைதியை நிலைநாட்டவும் உலக நாடுகளுக்கு இடையே நெருக்கமான பிராந்திய ஒத்துழைப்பு அவசியமானது” என அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச மட்டத்தில் இலங்கையின் குரலாக இந்த அமைதி முன்னெடுப்பை அவர் முன்வைத்துள்ளார்.
இந்த ‘PSOP’ திட்டமானது தற்போதைய நெருக்கடியான சூழலில் உலக நாடுகளை ஒரு பொதுவான அமைதித் தளத்திற்குள் கொண்டு வரும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.