BREAKING NEWS

தற்போதைய அரசியல் நகர்வுகளை விமர்சித்த சாணக்கியன்

PR
priya priya punidha in Latest Updates
Report
தற்போதைய அரசியல் நகர்வுகளை விமர்சித்த சாணக்கியன்

மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தன், ஒரு காலத்தில் முன்வைத்த “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கை, தற்போதைய ஆட்சியின் கீழ் கேள்விக்குறியாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

கடந்த காலங்களில் அவர் கூறிய, தீபாவளிக்கு தீர்வு கிடைக்கும் போன்ற விடயங்களை பலரும் விமர்சித்தாலும் அதன் பின்னணி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கருத்துத் தெரிவித்தார். 

முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கான தீவிர நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக சாணக்கியன் குறிப்பிட்டார். 

தீபாவளி அல்லது பொங்கலுக்குள் ஒரு தீர்வு கிடைக்கும் என்று சம்பந்தன் மிகுந்த நம்பிக்கையுடன் கூறியதற்கு அந்தச் சூழலே காரணமாக இருந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார். 

ஆனால், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடமாகியும், அரசியல் தீர்வு தொடர்பாக எந்தவொரு காத்திரமான நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என அவர் சாடியுள்ளார்.

மக்களாட்சியின் முக்கிய அங்கமான மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். 

எனினும், அரசாங்கம் ஒரு தெரிவுக்குழுவை நியமித்து, தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து இன்னும் ஆராய்ச்சிகளையே செய்து கொண்டிருக்கிறது என அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். 

ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் பேசும்போது வரவேற்கத்தக்க கருத்துக்களைக் கூறினாலும், நடைமுறையில் தமிழ் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன என்று சாணக்கியன் தெரிவித்தார். 

கடந்த கால அரசாங்கங்களை விடவும் மோசமான முறையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இப்போதைய ஆட்சியிலும் தொடர்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.