டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து உடைந்த சிலாபம் – திம்பில்ல குளத்தின் அணைக்கட்டைப் பாதுகாக்க அடுக்கப்பட்ட மணல் மூட்டைகள் தற்போது கடும் ஆபத்தில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

400 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட திம்பில்ல குளமானது, அப்பகுதியில் உள்ள 250 ஏக்கர் நெற்செய்கைக்கு நீர் வழங்குகிறது. நிலவிய கடும் மழை காரணமாக குளக்கட்டின் 50 அடிக்கும் அதிகமான பகுதி உடைந்து சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அவசரத் தீர்வாக மணல் மூட்டைகளை அடுக்கி அணைக்கட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இருப்பினும், தற்போது அதன் ஆபத்தான நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், அணைக்கட்டின் மேலும் சில இடங்களிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன், திம்பில்ல குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள 4 நீர் கதவுகளும் மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றன. அந்த நீர் கதவுகளைப் புனரமைக்காமல், சில ஆண்டுகளுக்கு முன்பு நீர் வருகையைக் கட்டுப்படுத்துவதற்காக “T” வடிவிலான அணை ஒன்று அமைக்கப்பட்டு, அதன் அருகே வான் கதவு ஒன்று பொருத்தப்பட்டது. இது ஒரு தற்காலிகமான தீர்வே என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தச் சேதமடைந்த பகுதிகளுக்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்காவிட்டால், எதிர்வரும் காலங்களில் வயல் நிலங்கள் நீரில் மூழ்கிப் பெரும் சேதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், அவ்விடங்களை விரைவாகப் புனரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அமரனந்த விஜேசேகர – மஹாவெவ

இலங்கை சினிமா