வெள்ளம்பிட்டியில் அமையப்பெற்றுள்ள SK Queen Campus கல்வி நிறுவனத்தின் முதலாவது டிப்ளோமா பட்டமளிப்பு நிகழ்ச்சி , கடந்த திங்கட்கிழமை (06) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) மிக விமர்சையாக நடைபெற்றது.
SK Queen Campus நிறுவனத்தின் தலைவி கலாநிதி சப்னாஸ் சிபான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் , ஹாசிம் உமர் பவுண்டேசனின் செயலாளர் திருமதி மரியம் ஹாசிம் உமர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த இளம் யுவதிகள் 50 பேர், கடந்த ஓராண்டு, ஆறு மாதங்கள் மற்றும் மூன்று மாத காலப்பகுதியில் பின்வரும் துறைகளில் டிப்ளோமா பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்:
அழகு கலைத்துறை (Beauty Culture)
மணப்பெண் அலங்காரம் (Bridal Dressing)
ஆடை வடிவமைப்பு (Fashion Designing)
கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த யுவதிகள் இந்தப் பயிற்சி நெறிகளில் இணைந்து பட்டம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மணப்பெண் அலங்காரம் மற்றும் வடிவமைப்புத் துறையில் செயல்முறைப் பயிற்சியில் சித்தி அடைந்த மாணவியருக்கு இதன்போது விசேட பரிசுகளும் பட்டங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் SK Queen Private Limited நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.சிபாஷ், கௌரவ அதிதி ஹமீட் நிசார், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில், வருகை தந்த அதிதிகளுக்கு SK Queen Campus தலைவியினால் விசேட நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.