மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், இயந்திரப் பழுது காரணமாக உதவி கோரிய ஈரானிய கடற்படைக் கப்பலான ‘இரின்ஸ் புஷேர்’ (Irins Bushehr)-க்கு இலங்கை மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் வழங்கியுள்ளது.
அமெரிக்கா ஈரானிய போர்க்கப்பலை (Iris Dena) மூழ்கடித்ததில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
கொழும்புத் துறைமுகத்தில் கப்பலை அனுமதிப்பது நாட்டின் வணிக நலன்களைப் பாதிக்கும் என்பதால், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் உத்தரவின் பேரில் அந்த கப்பல் திருகோணமலைத் துறைமுகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வன்முறைகளுக்கு மத்தியில் எந்தப் பக்கமும் சாயாமல், சர்வதேச உடன்படிக்கைகளை மதித்து, மனிதாபிமான அடிப்படையில் உயிர்களைக் காப்பதே தனது கடமை என இலங்கை வலியுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஈரானியப் பணியாளர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்படுகின்றனர். அதேநேரம், மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது.