இஸ்ரேலியத் தாக்குதல்களால் வீடுகளை இழந்து, லெபனான் வீதிகளிலும் கூடாரங்களிலும் தஞ்சமடைந்துள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு, அங்கு பணிபுரியும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் உணவுகளை வழங்கித் தங்களது மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடுமையான வேலைப்பளு மற்றும் குறைந்த ஊதியத்திற்கு மத்தியில் பணிபுரியும் இந்தத் தொழிலாளர்கள், தங்களுக்குக் கிடைத்த ஒரேயொரு விடுமுறை நாளை இதற்காக அர்ப்பணித்துள்ளனர். தங்களது சொற்ப ஊதியத்திலிருந்து சிறு தொகையைச் சேமித்து; அரிசி, வெங்காயம், குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளனர்.
பெய்ரூட் நகரின் வீதிகளில் தங்கியுள்ள மக்களுக்காக இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உணவைச் சமைத்து விநியோகித்துள்ளனர். இது குறித்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ள தொழிலாளர் ஒருவர், “நாளை இந்த நிலைமை நமக்கும் ஏற்படலாம்” எனக் குறிப்பிட்டு, தங்களது கஷ்டங்களுக்கு மத்தியிலும் ஏன் இந்த உதவியைச் செய்ய முன்வந்தோம் என்பதை உருக்கமாக விளக்கியுள்ளார்.
வீட்டுப் பணிப்பெண்களாகப் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் இந்த ஒருமைப்பாடு மற்றும் கருணை, சர்வதேச ரீதியில் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.