


ST டான்ஸ் ஸ்டூடியோ & அகடமி (ST Dance Studio & Academy) பெருமையுடன் வழங்கிய நடனப் பயிற்சிப் பட்டறையும் போட்டி நிகழ்வும் கடந்த 13, 14-ஆம் திகதிகளில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தேசிய ரீதியில் நாடு முழுவதிலுமிருந்து பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராகவும், நடனத்துக்கான சிறப்புப் பயிற்சியை வழங்கவும், தென்னிந்தியாவில் விஜய், ஜீ, கலைஞர் போன்ற பல தொலைக்காட்சிகளின் விருதுகளை வென்ற நடன இயக்குனர் சந்தோஷ் கலந்துகொண்டார். நடனப் போட்டிகளின் நடுவர்களாக, நம் நாட்டின் சகோதர மொழியைச் சேர்ந்த நடன இயக்குனர் ரெமோட் மாலக்க மற்றும் வித்தியாசாகர் ஆகியோரும் கலந்துகொண்டார்கள். இப்போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்குச் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. அத்துடன், வெற்றியாளர்களுக்கு விருதுகளும் பணப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக, ‘மஞ்சள் ரெஸ்டாரன்ட்’ உரிமையாளரும் இளம் தொழிலதிபருமான கெவின் ராகுலும், ‘புரவலர் புத்தகப் பூங்கா’ தலைவர் ஷாசிம் உமரும் கலந்துகொண்டனர். சிறப்பு அதிதிகளாக, ஜீ தமிழ் பாடல் போட்டியில் கலந்துகொண்டு நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்த கலைஞர் சபேசன், ‘புதிய அலைகள் வட்ட’ ஸ்தாபகர் திரு. ராதா மேத்தா, ‘கண்ணகி கலாலயம்’ தலைவர் A. K. இளங்கோ ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.
இந்நிகழ்வு தாங்கள் நடத்தும் முதல் நிகழ்வு என ஏற்பாட்டாளரும் அதன் ஸ்தாபகரும் மேடையில் கூறியபோதும், இதுவே ஒரு சிறந்த வெற்றி நிகழ்வாக அமைந்தது என்பதற்கு அனைவரின் கரகோசங்களும் பாராட்டுகளும் சான்று பகர்ந்தன.
அத்துடன், அனுசரணை வழங்கியவர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், எமது விழித்திரை ஊடகத்துக்கும் நினைவுச் சின்னம் கிடைக்கப்பெற்றது. அதனை எமது மேல் மாகாணத்துக்கான நிருபர் M. F. M. நசார் பெற்றுக்கொண்டார்.