நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் அரச மருத்துவ அதிகாரிகள் தொடங்கிய தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் (27) தொடர்கிறது. 

பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைச் செயல்படுத்தத் தவறியமையை கண்டித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடந்த 23 ஆம் திகதி நாடு முழுவதும் 48 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கியது. 

நேற்று முன்தினம் காலை 08.00 மணிக்கு குறித்த தொழிற்சங்க நடவடிக்கை முடிவடைந்தது. அதன் பின்னர் மருத்துவமனைகளில் தினசரி சிகிச்சைகள் வழக்கம் போல் முன்னெடுக்கப்பட்டன. 

இருப்பினும், சுகாதார அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்ட திட்டங்களை முறையாக செயல்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறி, நேற்று காலை 08.00 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை மீண்டும் தொடங்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்தது. 

இந்த நிலையில் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஒரு பகுதியாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருந்துகளை வெளியில் உள்ள மருந்தகங்களில் (External Pharmacies) வாங்குமாறு பரிந்துரைத்தல், தேவையான மருத்துவப் பரிசோதனைகளை வெளியில் உள்ள தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளுமாறு நோயாளிகளுக்குப் அறிவுறுத்துதல் போன்ற செயல்பாடுகளிலிருந்து விலகுவதற்கு மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை சினிமா