தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வரும் விடைத்தாள் திருத்தும் பணியின் போது, மாணவர் ஒருவர் கேள்விகளுக்குப் பதிலாகத் தனது தனிப்பட்ட துயரங்களை விடைத்தாளில் எழுதி ஆசிரியரிடம் முறையிட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“சார், எனக்கு அம்மா, அப்பா யாரும் இல்லை. எனக்கு இப்போது எல்லாமே நீங்கள்தான். தயவுசெய்து என்னை இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறச் செய்யுங்கள்,” என அந்த மாணவர் பதிவிட்டுள்ளார்.
வெறும் எழுத்துக்களோடு நின்றுவிடாமல், விடைத்தாளின் ஓரத்தில் ஒரு மாணவன் ஆசிரியரின் காலில் விழுந்து வணங்குவது போன்ற ஒரு படத்தையும் வரைந்து தனது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விடைத்தாளின் புகைப்படம் இணையத்தில் பரவலாகி வரும் நிலையில், “படிக்காமல் உணர்ச்சிகளைத் தூண்டி மதிப்பெண் பெறுவது முறையல்ல” என ஒரு தரப்பினரும், “மாணவர்களின் மன அழுத்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” என மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.
கல்வி என்பது வெறும் மதிப்பெண்கள் மட்டுமல்ல, சரியான வழிகாட்டலும் ஒழுக்கமுமே என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.