சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்து ஏற்பட்ட விபத்தில், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களில், யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞனும் அடங்குவதாக அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பேருந்தில் பயணித்த ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டதே இந்த விபரீதத்திற்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், இது ஒரு விபத்தா அல்லது திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, 5 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சுவிட்சர்லாந்து ஜனாதிபதி உயிரிழந்தவர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, இறுதி அஞ்சலியையும் செலுத்தியுள்ளார்.