நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்கிலயர் (St. Clair) பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்று (Cabana) இன்று (08) நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இப்பகுதியில் உள்ள இந்த விடுதியில் திடீரெனத் தீ பரவியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்த போதிலும், விடுதி மரத்தால் அமைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாகப் பரவி கட்டடம் முழுமையாக எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து ஏற்பட்ட போது விடுதியில் நபர்கள் தங்கியிருந்தனரா அல்லது உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. தீ விபத்திற்கான காரணம் மின்கசிவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.