தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் உத்தியோகபூர்வ இல்லமொன்றில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற சாரதி ஒருவர் இன்று (19) லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 65 வயதான சந்தேக நபர், ஆராய்ச்சி நிலையத்தின் சாரதி ஒருவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தின் சமையலறையைப் பயன்படுத்தி இந்த சட்டவிரோத மது உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளார். அங்கிருந்து நண்பர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யும் மோசடியிலும் இவர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, லிந்துலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பாலித நந்தசிறி தலைமையிலான குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது 50,000 மில்லிலீட்டர் ‘கோடா’ மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.