BREAKING NEWS

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ரூ. 1,750 ஆக உயர்வு இன்று

PR
priya priya punidha in Latest Updates
Report
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ரூ. 1,750 ஆக உயர்வு இன்று

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக உயர்த்துவதற்கான உடன்படிக்கை பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையே இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் 2026 பாதீட்டுத் திட்ட யோசனைக்கு அமைவாக, தற்போது வழங்கப்பட்டு வரும் 1,350 ரூபாய் தினசரி சம்பளத்தை 400 ரூபாயால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, தோட்டத் தொழிலாளர்களின் புதிய தினசரி சம்பளம் 1,750 ரூபாயாக உயர்கிறது.

இந்த 400 ரூபாய் சம்பளம் அதிகரிப்பில், 200 ரூபாய் பெருந்தோட்ட நிறுவனங்களினால் வழங்கப்படும். மிகுதி 200 ரூபாய் அரசாங்கத்தினால் வழங்கப்படும். 

இந்தத் திட்டத்திற்காக அரசாங்கம் நிதி அமைச்சின் ஊடாக 5 பில்லியன் ரூபாயை (5,000 மில்லியன்) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பளம் உயர்வுக்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு, நாடாளுமன்றத்தில் பாதீட்டுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பெருந்தோட்ட நிறுவனங்கள், பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றுடன் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஜனவரி மாதத்திற்கான சம்பளம் உயர்வுத் தொகை, தொழிலாளர்களின் வருகை விபரங்களின் அடிப்படையில் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் 200 ரூபாய் பங்களிப்பை வைப்பிலிடுவதற்காகப் பெருந்தோட்ட நிறுவனங்களிடம் இருந்து தனித்தனியான வங்கிக் கணக்கு விபரங்கள் பெறப்பட்டுள்ளன.

நிறுவனங்கள் தொழிலாளர்களின் வருகை விபரங்களை பெப்ரவரி 3ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும், அதன் பின்னர் நிதி அமைச்சின் நிதி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு பெப்ரவரி 10ஆம் திகதிக்குள் தொழிலாளர்களுக்குக் கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

இதன்போது, பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுனில் பொஹெலியத்த கருத்துத் தெரிவிக்கையில், இந்தச் சம்பள உயர்வுத் திட்டம் 2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாகக் குறிப்பிட்டார். 

இந்த உயர்வினால் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு மேலதிகமாக 6 பில்லியன் ரூபாய்க்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தொழிற்துறையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல தொழிலாளர்களின் வருகை, உற்பத்தித்திறன் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

எனினும் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சரோ, பிரதி அமைச்சரோ கலந்துகொள்ளவில்லை.

மேலும் முதலாளிமார் சங்கத்தின் பேச்சாளர் ரொஷான் ராஜதுரையும் கலந்துகொண்டிருக்கவில்லை