சர்ச்சைக்குரிய கல்வித் தொகுதி தொடர்பில் பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்று, அது தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கங்கொடவில நீதவான் ருவந்திகா மாரசிங்க நேற்று (30) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தரம் 6 ஆங்கிலப் பாடத் தொகுதியில், சிறுவர்களுக்குப் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பில் அத்திணைக்களம் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்டிருந்ததுடன், நீதிமன்றத்தின் அறிவிப்புக்கமைய விசாரணைகளின் முன்னேற்றத்தை அதன் அதிகாரிகள் நேற்றும் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

வழக்கில் இடையீட்டுத் தரப்பு சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மந்தகதியில் முன்னெடுப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அனைவரும் பொறுப்புக் கூறவேண்டிய இந்தச் சம்பவத்தில், இரண்டு அதிகாரிகளின் சேவையை மட்டும் இடைநிறுத்தி இதனை ஒரு சாதாரணச் செயலாகக் காட்ட முனைவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் பொதுச் சொத்து துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில், இத்தொகுதி தொடர்பில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களிடமும் வாக்குமூலம் பெற்று விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு நீதவான் அந்தச் சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் மீது சந்தேகம் நிலவுமாயின், அவரும் இதில் ஒரு சாட்சியாளராக இருக்க வேண்டும் எனவும் நீதவான் இதன்போது கூறினார்.

அத்துடன், விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கையிடுமாறும் கங்கொடவில நீதவான் ருவந்திகா மாரசிங்க உத்தரவிட்டார்.

இலங்கை சினிமா