சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் இன்று (11) காலை திருகோணமலையிலுள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குறிப்பாக திருகோணமலை வலயத்திலிருந்தும் வருகை தந்திருந்த பெருமளவிலான முன்பள்ளி ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள தமக்கான கொடுப்பனவு உயர்வு, நிரந்தர நியமனம் மற்றும் ஏனைய சலுகைகளை வலியுறுத்தி இவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், தமது நியாயமான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை கிழக்கு மாகாண ஆளுநரிடம் ஆசிரியர்கள் கையளித்தனர். முன்பள்ளி ஆசிரியர்களின் கௌரவமான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த மாகாண அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர்.