ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால், இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை உலகையே அதிரவைத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் ட்ரம்ப் விதித்து வரும் தொடர் காலக்கெடுகள்:
முதல் காலக்கெடு (மார்ச் 21): 48 மணி நேரத்திற்குள் நீர்வழியைத் திறக்கத் தவறினால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தார்.
இரண்டாம் காலக்கெடு (மார்ச் 23): ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் கூறி, தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைத்தார்.
மூன்றாம் காலக்கெடு (மார்ச் 27): ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஏப்ரல் 6-ம் திகதி வரை காலக்கெடுவை நீடித்தார்.
48 மணி நேர எச்சரிக்கை (ஏப்ரல் 4): ஏப்ரல் 6 ஆம் திகதி நெருங்கிய நிலையில், “அனைத்து நரகத்தையும்” சந்திக்கத் தயாராக இருக்குமாறு 48 மணி நேரக் காலக்கெடு விதித்தார்.
இறுதி எச்சரிக்கை (ஏப்ரல் 7): கிழக்கு நேரப்படி இன்று இரவு 8:00 மணிக்கு (செவ்வாய்க்கிழமை) மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனத் தெரிவித்த ட்ரம்ப் , “இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழியும், அது ஒருபோதும் மீட்கப்படாது” எனத் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உலக வரலாற்றின் மிக முக்கியமான மற்றும் ஆபத்தான தருணமாக இது பார்க்கப்படுகிறது. ஈரானின் பதில் நடவடிக்கை மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தம் இந்த மோதலைத் தடுக்குமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும்.