BREAKING NEWS

ஈரான் வீராங்கனைகளை கைவிட மாட்டோம்! அவுஸ்ரேலியாவுடன் பேசிய டொனால்ட் ட்ரம்ப்.

DH
dhusanthi dhusi in அரசியல்
Report
ஈரான் வீராங்கனைகளை கைவிட மாட்டோம்! அவுஸ்ரேலியாவுடன் பேசிய டொனால்ட் ட்ரம்ப்.

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக மைதானத்தில் மௌனப் போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து மகளிர் கால்பந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்ரேலியா பாதுகாப்பு வழங்கியுள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஏஎப்சி (AFC) மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் போது, ஈரான் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது இந்த வீராங்கனைகள் அதைப் பாட மறுத்தனர். ஈரானில் நிலவும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இவர்கள் மேற்கொண்ட இந்தச் செயல், அந்நாட்டு அரச ஊடகங்களால் “தேசத்துரோகம்” என வர்ணிக்கப்பட்டது. இதனால் அவர்கள் தாயகம் திரும்பினால் கைது செய்யப்படலாம் அல்லது தூக்குத் தண்டனை வரை சந்திக்க நேரிடும் என மனித உரிமை அமைப்புகள் எச்சரித்தன.

இது குறித்து அவுஸ்ரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானிஸுடன் தான் பேசியதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், “அந்த ஐந்து வீராங்கனைகளும் தற்போது அவுஸ்ரேலிய அதிகாரிகளின் முழுப் பாதுகாப்பில் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை அவுஸ்ரேலியா செய்து வருகிறது” எனத் தெரிவித்தார். மேலும், அவுஸ்ரேலியா அவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க வேண்டும் எனவும், ஒருவேளை அவுஸ்ரேலியா தயங்கினால் அமெரிக்கா அவர்களைப் பொறுப்பேற்கத் தயார் என்றும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய அதிகாரிகள் இந்த விவகாரத்தை மிகவும் இரகசியமாகக் கையாண்டு வரும் நிலையில், ட்ரம்ப்பின் இந்த வெளிப்படையான அறிவிப்பு சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஈரானிய வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தமது முன்னுரிமை என ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.