தமிழக சட்டமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முக்கிய விளக்கமளித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக-வை இணைக்க முயற்சிகள் நடப்பதாகவும், விஜய்க்கு துணை முதலமைச்சர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவி சலுகை செய்யப்படுவதாகவும் பரவி வரும் செய்திகளுக்கு செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்கள் தலைவர் விஜய், முதலமைச்சராக மக்கள் பணியாற்றவே சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். துணை முதலமைச்சர் பதவி என்ற பேச்சுக்கே இடமில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக அங்கீகரிக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார். தற்போது வரை எந்தக் கட்சியுடனும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்றும், 234 தொகுதிகளிலும் போட்டியிட தவெக தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் சாடிய செங்கோட்டையன், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், அந்த மாற்றத்தைக் கொண்டு வரும் திறன் விஜய்க்கு மட்டுமே இருப்பதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார். தேர்தல் அறிவிப்புக்குப் பின் மக்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த எழுச்சி தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.