யுக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதற்குத் தேவையான மின்னணு பாகங்களைத் தயாரிக்கும் ரஷ்யாவின் மிக முக்கியமான இராணுவத் தொழிற்சாலையைத் தங்களது படைகள் வெற்றிகரமாகத் தாக்கி அழித்துள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் பிரையன்ஸ்க் (Bryansk) எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ‘கிரெம்னி எல்’ (Kremniy El) தொழிற்சாலையே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. யுக்ரைன் இராணுவம் இந்தப் பாரிய தாக்குதலுக்குப் பிரித்தானியத் தயாரிப்பான ‘ஸ்டோர்ம் ஷேடோ’ (Storm Shadow) ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் வான் பாதுகாப்பு வளையத்தை மீறி இந்த ஏவுகணைகள் இலக்கைச் துல்லியமாகத் தாக்கியுள்ளன.
இந்தத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 42 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “பிரித்தானிய நிபுணர்களின் நேரடிப் பங்கேற்பு இன்றி இவ்வளவு துல்லியமாக ஏவுகணைகளை ஏவ முடியாது” எனக் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், யுக்ரைனை இராணுவமற்ற நாடாக மாற்றுவதே தங்களது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யுத்தம் ஒரு முட்டுக்கட்டையை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அடுத்த வாரம் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்புள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். யுக்ரைனின் டான்பாஸ் (Donbas) பிராந்தியத்தில் ரஷ்யா தற்போது கட்டுப்பாட்டில் வைத்துள்ள 80% நிலப்பரப்பை அவர்களுக்கு விட்டுக்கொடுக்கும்படி ட்ரம்ப் தரப்பில் முன்மொழியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்க யுக்ரைன் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.