நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக நீர் மட்டம் குறைந்துள்ளதால், ஹோமாகம, பிலியந்தலை உள்ளிட்ட ஐந்து முக்கிய பகுதிகளில் 5 நாட்களுக்கு ஒருமுறை நீர் விநியோகத்தை நிறுத்தத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
ஹோமாகம, பாதுக்க, மஹரகம, பிலியந்தலை மற்றும் கெஸ்பேவ ஆகிய பகுதிகளில் சுழற்சி முறையில் நீர் விநியோகம் தடைப்படும்.
முன்னர் 24 மணிநேரம் எனத் திட்டமிடப்பட்டிருந்த இத்தடை, தற்போது 18 மணிநேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. நிலைமைக்கேற்ப 3 முதல் 18 மணிநேரம் வரை இத்தடை மாறுபடலாம்.
களுகுவெவ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் மிக வேகமாக சரிந்து வருவதால், அங்கிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு நாளொன்றுக்கு 75,000 கன மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நீர் இருப்பு இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாகும்.
நீர் விநியோகம் நிறுத்தப்படும் நேரம் மற்றும் கால அளவு குறித்து, நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட கைபேசி இலக்கங்களுக்கு குறுஞ்செய்தி (SMS) ஊடாக முன்கூட்டியே அறிவிக்கப்படும்.
அதேவேளை, லாபுகம நீர்த்தேக்கத்தில் இன்னும் 45 நாட்களுக்குத் தேவையான நீர் இருப்பு உள்ளதால், கொழும்பு நகருக்கான நீர் விநியோகத்தில் தற்போது எவ்வித மாற்றமும் இல்லை எனச் சபை தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.