இலங்கையின் காலநிலை மாற்றத்தின் விளைவாக குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக, அம்பத்தலே நீர் வழங்கல் திட்டத்தை நவீனமயமாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் வகையில், பாதுகாப்பான நீர் வழங்கல் திட்டங்களை (Climate Resilient Water Safety Plans) உருவாக்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதில், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சமூகப் பொறுப்புணர்வு மற்றும் பாலின சமத்துவத்தைப் பேணுதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது.
‘அனர்த்தங்களைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்புக்கான கூட்டணி’ (CDRI) மூலம் கோரப்பட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, UN Habitat நிறுவனத்தின் ஆலோசனையின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 469,232 அமெரிக்க டொலர் நிதி உதவி கிடைக்கப்பெற்றுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் இதற்கு மேலதிகமாக 10,000 அமெரிக்க டொலர் இணை நிதியுதவியாக (Co-financing) வழங்கப்படவுள்ளது.
இத்திட்டம் 24 மாத காலப்பகுதிக்குள் நிறைவு செய்யப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை முறையாக அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நீர்வழங்கல் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.