இலங்கையின் பல பகுதிகளில் இன்று (22) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், தென் மாகாணம் மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது கடற்பரப்புகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய மின்னல் தாக்கங்கள் மற்றும் தற்காலிகப் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.