ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 622 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அனர்த்தத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஹெலிகொப்டர்களின் உதவியுடன் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே மனிதாபிமான நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் தெற்காசிய நாட்டினை இந்த அனர்த்தம் பேரழிவுக்கு உட்படுத்தியுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தலிபான்களால் நடத்தப்படும் ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 622 ஆக உயர்ந்துள்ளதாகவும் அது சுட்டிக்காட்டியது.

முன்னதாக அரசு நடத்தும் வானொலி தொலைக்காட்சி ஆப்கானிஸ்தான் (RTA) சுமார் 500 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தது.

நிலநடுக்கத்தினால் குனார் மாகாணத்தின் மூன்று கிராமங்கள் பெரும் அழிவினை சந்தித்தன.

2023 ஒக்டோபர் மாதம் மேற்கு ஆப்கானிஸ்தானைத் தாக்கிய 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

இது அண்மைய ஆண்டுகளில் ஆப்கானை தாக்கிய மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *