கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று(05.10.2025) நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் மகளிர் உலகக் கிண்ணப் போட்டியின் போது நாணய சுழற்சி குறித்த குழப்பம் சர்ச்சையையும் நியாயமற்ற ஆட்டம் குறித்த குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

நாணய சுழற்சியின் போது, இந்திய அணித் தலைவி ஹர்மன்ப்ரீத் கவுர் நாணயத்தை மேல் நோக்கி சுண்டினார். இதனையடுத்து, பாகிஸ்தான் தலைவி பாத்திமா சனா “டெயில்ஸ்” என்று கூறினார்.

இருப்பினும், நாணய சுழற்சியின் தொகுப்பாளர் மெல் ஜோன்ஸ் மற்றும் போட்டி நடுவர் ஷாண்ட்ரே ஃபிரிட்ஸ் ஆகியோர் அழைப்பு “ஹெட்ஸ்” என்று அறிவித்தனர். நாணயம் தலையில் விழுந்தது.

அதிகாரிகள், நாணய சுழற்சியில் பாகிஸ்தான்வென்றதாக அறிவித்தனர். சனா உடனடியாக முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கிரிக்கெட் ஆய்வாளர்கள், இந்த குழப்பத்தை ‘சங்கடமான பிழை’ என்று விபரித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. அதேநேரம், இரண்டு அணித் தலைவிகளும், நாணய சுழற்சியின் போது கைகுலுக்குவதைத் தவிர்த்தனர்.