நேரடி ஒப்பந்தத்தின் கீழ் எரிபொருள் வாங்குவதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) பெட்ரோலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை தனது முழு பெட்ரோலியத் தேவையையும் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் இரண்டையும் இறக்குமதி செய்கிறது.
மேலும், எரிபொருள் இறக்குமதிக்கான விநியோகஸ்தர்களை திறந்த கேள்விமனு செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கிறது.
இந்த நிலையில் நேரடி எரிபொருள் கொள்முதல்களுக்காக ஐக்கிய அரபு எமிரேட் அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள முக்கிய எரிபொருள் நிறுவனமான அந் நாட்டு அரசுக்குச் சொந்தமான அபுதாபி தேசிய எரிபொருள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி மெஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில்,
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
மேலும், திருகோணமலையை பெட்ரோலிய மையமாக மேம்படுத்துவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளையும் உள்ளடக்கிய முத்தரப்பு ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவும் இலங்கையும் பல தயாரிப்பு பெட்ரோலிய குழாய் அமைக்க திட்டமிட்டுள்ளன.
மேலும், ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவ இலங்கை திட்டமிட்டுள்ளது.
இது சினோபெக்கின் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டாகும் என்பதும் விசேட அம்சமாகும்.