சுற்றுலா இலங்கை – ஸிம்பாப்வே அணிகள் இடையிலான T20I தொடரில் பங்கெடுக்கும் இலங்கை குழாம் வெளியிடப்பட்டுள்ளது.
ஸிம்பாப்வேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது, அங்கே ஒருநாள் தொடரினை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடுகின்றது.
இந்த தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை T20 குழாமே மற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் முக்கிய உள்ளடக்கமாக அறிமுக வீரரான விஷேன் ஹலாம்பகே காணப்படுகின்றார்.
20 வயது மாத்திரம் நிரம்பிய சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரரான ஹலாம்பகே அண்மையில் நிறைவுக்கு வந்த இலங்கை கிரிக்கெட் சபை T20 தொடரில் சிறந்த முறையில் துடுப்பாடியமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் இலங்கை அணிக்காக கடந்த 2022ஆம் ஆண்டு T20 போட்டிகளில் விளையாடிய முன்வரிசைத் துடுப்பாட்ட வீரர் கமில் மிஷார, நுவனிது பெர்னாண்டோ மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோரும் மீண்டும் இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் உபாதைக்குள்ளான வனிந்து ஹஸரங்க ஸிம்பாப்வே தொடரில் உள்வாங்கப்படவில்லை.
மறுமுனையில் மதீஷ பதிரனவும் நீண்ட இடைவெளியொன்றுக்குப் பின்னர் இலங்கை T20 குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை – ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் செப்டம்பர் 03 ஆம் திகதி ஆரம்பமாகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
சரித் அசலன்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், கமில் மிஷார, விஷேன் ஹலாம்பகே, தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஸன, துஷான் ஹேமன்த, துஸ்மன்த சமீர, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார, மதீஷ பதிரன ஆகியோரே ஸிம்பாப்வேக்கு எதிராக விளையாடவுள்ளனர்.