நம் நாட்டுக் கலைஞர்கள் நடித்துள்ள பிரவீன் கிருஸ்ணராஜா இயக்கத்தில் உருவான ‘தி மாதர்‘ திரைப்படம் இன்று மாலை 05 மணிக்கு மட்டக்களப்பில் விநியோகஸ்தர் ஊடாக திரையிடப்படவுள்ளது.

Windsor Production தயாரிப்பில், பிரவீன் கிருஸ்ணராஜா இயக்கியுள்ள இந்த திரைப்படமானது சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் மற்றும் வன்முறை சம்பவங்களை எடுத்துக் காட்டும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விக்னேஷன் தேவராஜ், ரூபஷாலினி, கோபி ரமணன், திவிராஜ், பி.டி. செல்வம், போல்ராஜ், ஜனா, சிபி, ரஷிகா அருட்செல்வம், பிரேம்ஜித், நீல்ரிக்ஷன் உள்ளிட்ட நம் நாட்டுக் கலைஞர்கள் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து உள்ளனர், குறிப்பாக தந்தையாக நடித்த விக்னேஷன் தேவராஜ், வில்லனாக நடித்த கோபி ரமணன் மிக தத்ரூபமாக நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் கெமரா ஒளிப்பதிவு (DOP) தேவ் கிறிஸின். எடிட்டிங் சரண். இசை சஞ்ஜித் லக்ஷ்மன்.

இவர்கள் மூவரும் தமது கைவண்ணத்தையும் கலை எண்ணத்தையும் மிக அருமையாக காட்டியுள்ளனர்.

குறிப்பாக தேவ் கிறிஸின் மிக வித்தியாசமான கோணத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார், அதேபோன்று சரணின் எடிட்டிங் பணிகள் மிக சிறப்பாக அமைந்துள்ளதோடு சஞ்ஜித் லக்ஷ்மன் இசை படத்தின் விறுவிறுப்புக்கு முக்கிய புள்ளியாக அமைந்துள்ளது.

சுமார் 40 நிமிட நீளமுடைய இந்த குறுந் திரைப்படமானது கயவர்கள் கூட்டத்தினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படும் தனது மகளுக்காக தந்தையின் பழிவாங்கலையும், சமூதாயத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களையும் சித்தரித்துக் காட்டுகின்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை மேற்கொள்ளும் கயவர்கள் கூட்டம் இறுதியில் பெண்களின் கைகளினாலேயே பழிவாங்கப்படுவதும் இயக்குநர் பிரவீன் உள்ளிட்ட குழுவினரின் பாராட்டப்பட வேண்டிய முயற்சியாக அமைந்துள்ளது.

படத்தில் சில இடங்களில் சலிப்பு தன்மையும் குறைபாடுகளும் இருந்தாலும் கூட இதுபோன்ற படைப்புக்கான முயற்சி பாராட்டத்தக்கது.

மொத்தத்தில் இத்திரைப்படம் 50க்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று அசத்தியுள்ளது.