இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் திடீரென இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், பலியான மாணவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
ஜாவா மாகாணத்தின் சிடோர்ஜா நகரத்தில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய பாடசாலையின் கட்டடம், கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி திடீரென இடிந்து வீழ்ந்தது. இதில், 12 முதல் 19 வயதுக்குட்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக இந்தோனேசியாவின் மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதுவரையில், 61 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்தில், பாடசாலைக் கூடத்தில் இருந்த ஒரேயொரு மாணவர் மட்டும் எந்தவொரு காயமுமின்றி உயிர் தப்பிய நிலையில், படுகாயமடைந்த 99 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக, விபத்து நடைபெற்று 3 ஆவது நாளன்றே இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.