இலங்கையின் பல பிரதேசங்களில் கண்டறியப்பட்ட ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, நாட்டின் அனைத்து மாவட்டங்களும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அபாயம் உள்ள பகுதிகளாகவும், பன்றிகள் நோய் அபாய விலங்குகளாகவும் 1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 3 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.நிலவும் நோயின் தன்மையை பொறுத்து இந்த கால அவகாசம் நீடிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் பின்வரும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது:நோய்த் தொற்று உள்ள பகுதிகளில் இருந்து பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் பன்றி தீவனங்களை கொண்டு செல்லுதல், வாங்குதல், விற்பனை செய்தல்.

பன்றி வளர்ப்புப் பண்ணைகளுக்கு இடையே பன்றிகளை இடமாற்றம் செய்தல்.நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட பண்ணைகளில் இருந்து பன்றிகளை விற்பனைக்கு உட்படுத்துதல்.

இந்த கடுமையான கட்டுப்பாடுகள், நாட்டின் பன்றி வளர்ப்புத் தொழிலையும் பொது சுகாதாரத்தையும் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டுள்ளன.