இலங்கையின் வரி விதிப்புக் கொள்கைகள் நாட்டின் சமூக சமத்துவமின்மையைத் தூண்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ள அந்த அமைப்பு, இந்த நிலைமை கல்வி மற்றும் ஏனைய பொதுச் சேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை நீண்ட காலமாக பற்றாக்குறையாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு, வருவாயைப் போதிய அளவு திரட்டாத வரி விதிப்புக் கொள்கைகளே முக்கிய காரணமாக அமைந்தன என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கம் தமது வருவாயில், சராசரியாக 80 சதவீதத்தை, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வெற் போன்ற மறைமுக வரிகளில் இருந்து பெறுகிறது.

இந்த வரிகள் பொதுவாக வறியவர்களின் வருமானத்தில் அதிகப் பங்கை எடுத்துக்கொள்வதால், அவை சமத்துவமின்மையை அதிகரிக்கின்றன.

நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்குகளின் மதிப்பு 2022 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருவாயில் 56சதவீதமாக இருந்தது.

இது கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியைவிட சுமார் மூன்று மடங்கு அதிகமாகும்.

இந்தச் சலுகைகள் செலவு மிக்கதாகவும், அவற்றின் செயல்திறன் கேள்விக்குறியாகவும், தவறாகப் பயன்படுத்தக்கூடியதாகவும் உள்ளன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திரத்திற்குப் பிந்திய ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3சதவீதம் முதல் 5சதவீதமாக இருந்த கல்விக்கான நிதி ஒதுக்கீடு, 2022 ஆம் ஆண்டில் வெறும் 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்த தொகையானது உலகிலேயே கல்விக்காக ஒதுக்கப்பட்ட மிகக் குறைந்த தொகைகளில் ஒன்றாகும்.

நிதிப் பற்றாக்குறை காரணமாகப் பல பாடசாலைகள் அடிப்படைக் கட்டணங்களை வசூலிக்கும் நி�