2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்திருந்தாலும், இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகச் சர்வதேச ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளன. சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டுள்ளனர். கடந்த மூன்று ஜனாதிபதிகளின் ஆட்சிக்காலத்தில் இதற்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை.

அரசியல்வாதிகள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன. 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரசாரத்தின் போது, தேசிய மக்கள் சக்தி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பை இல்லாதொழித்து போதைப்பொருட்களை ஒழிப்பதாக உறுதியளித்தது.

அதற்கமைய, விரிவான போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் குற்ற எதிர்ப்பு திட்டத்தை ஆரம்பித்து, 2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களைக் கண்டறியும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

2025ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், போதைப்பொருள் குற்றங்களுக்காக ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரைக் கைது செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மெத்தம்பேட்டமைனின் பயன்பாடு 2017 ஆம் ஆண்டில் முதன்முதலில் பதிவாகியதாகவும், பெரும்பாலான பயனர்கள் 19 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் சர்வதேச ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.