இலங்கைச் சினிமாவின் பெருமையை உலக அரங்கில் ஒலிக்கச் செய்யும் வகையில் உருவாகியுள்ள “நீறுபூத்த நெருப்பு” திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இத்திரைப்படம் இலங்கை மற்றும் தென்னிந்திய நட்சத்திரங்களை ஒரே மேடையில் இணைத்து உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும்.

ஜெர்மனிக்கான இலங்கை தூதுவரும் முன்னாள் நீதியரசருமான சரத் கோங்காகே அவர்களின் புதல்வர்,
சர்வதேச விருது பெற்ற இயக்குநர் தேவிந்த் கோங்காகே இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

யாழ்மண்ணில் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம்,
இயக்குநர் தேவிந்தின் முந்தைய படைப்புகள் ‘கிரிவசிபுர’, ‘பவதாரண’, ‘நாட்டாமி ஆமி’ ஆகியவற்றின் தொடர்ச்சியாக சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பாக கிரிவசிபுர திரைப்படம் இலங்கையின் கடைசி மன்னன் சிரிவிக்கிரம ராஜசிங்கனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு, சர்வதேச அளவில் பாராட்டுப் பெற்றிருந்தது.

பௌத்த மதகுரு பிபிலதெனிய மகாநாம தேரர் இத்திரைப்படத்திற்காக இசையமைத்துள்ளார்.
இந்தியாவில் இசை கற்று, இலங்கையில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்த அனுபவமிக்க கலைஞராக இவர் திகழ்கிறார்.

“போய்வாரேன் உயிரே” என ஆரம்பிக்கும் இதயத்தை நெகிழ்க்கும் பாடலை
தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் (ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் – பாடல் புகழ்) எழுதியுள்ளார்.

இது அவரது முதல் இலங்கை தமிழ் திரைப்படப் பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பாடல் மூலம் Zee Tamil Title Winner கில்மிஷா மற்றும்
Shakthi TV Junior Superstar புகழ் சாதீர் அஹமத் ஆகியோர்
திரைபாடகர்களாக அறிமுகமாகின்றனர்.

அவர்களது முந்தைய “வானம் பூமி” பாடல் இலங்கையெங்கும் ஆசிரியர் தினங்களில் பாடப்படும் அளவிற்கு பிரபலமானது.

இந்திய தமிழ் நடிகர்கள் போஸ் வெங்கட், ஜி. எம். குமார், தேஜு வெங்கட் ஆகியோரைத் தொடர்ந்து
இலங்கையைச் சேர்ந்த அரவிந்தன் சிவஞானம், தர்ஷி பிரியா, சௌமியா சத்தியசீலன், எல்ராய் அமலதாஸ்,
கோபி ரமணன், கிரேஸ் தென்னகோன், மகேந்திரநாத் வீரரத்ன், வகீஷா சால்காடோ,
ஜெராட் நோயல், பால்ரெஜி பிரேம்குமார், மரியம் விஜயரத்ன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“நீறுபூத்த நெருப்பு மனிதாபிமானம், சமாதானம் மற்றும் இன ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு, இசை, ஒப்பனை, கலை, ஒலி – அனைத்திலும் தரம் மிகுந்த படைப்பாக இது அமைந்துள்ளது.

இது இலங்கைச் சினிமாவுக்குள் ஒரு புதிய மைல்கல்.
இதில் நடித்த பல கலைஞர்களுக்கும் இது ஒரு திரை திருப்பமாக அமையும்.

சர்வதேச அளவிலும் பேசப்படும் திறன் கொண்ட இப்படம் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெறும் என நம்புகிறேன்,”
எனப் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

மனித நேயம், கலாச்சார ஒற்றுமை மற்றும் கலை நுணுக்கம் ஆகியவற்றின் சங்கமமாக உருவாகியுள்ள
“நீறுபூத்த நெருப்பு” திரைப்படம்,
இலங்கை மற்றும் தென்னிந்திய சினிமாவுக்குள் ஒரு சர்வதேச தரமான படைப்பாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.