கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ரியாத்தில் இருந்து கொழும்பு நோக்கி வருகைதந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், இடம்பெற்ற பதற்றமான சம்பவத்தைக் காட்டும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளின்படி, குறித்த விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கத் தயாராக இருந்த வேளையில், பாதுகாப்பு விதிமுறைகளின் படி அனைத்து பயணிகளும் அவர்கள் இருக்கைப்பட்டிகளை அணிந்து இருக்கை எடுக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.

ஆனால்,இதன்போது குறித்த பயணி கழிப்பறைக்குச் செல்ல முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் விமானப் பணியாளர்கள் அவரைத் தடுக்க முயன்றபோது, அந்தப் பயணி ஆக்ரோஷமாகி அவர்களுடன் கடுமையாக மோதலில் ஈடுபட்டுள்ளார்.

விமானப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. விமானத்தின் உள்ளே நடந்த இந்தப் பதற்றமான மோதலை, ஏனைய பயணிகள் தங்கள் கையடக்க தொலைபேசியில் காணொளியாகப் பதிவுசெய்துள்ளனர்.

குறித்த காட்சிகள் தற்போது சமூக ஊடகங்கள் முழுவதும் பரவலாகப் பரவி வருகின்றன. விமானம் தரையிறங்கிய பின்னர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய பொலிஸார் உடனடியாக செயற்பட்டு, குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளது.

இதற்கமைய கைது செய்யப்பட்ட 28 வயதுடைய சந்தேகநபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.