ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு இன்று (1) பெருமளவில் பக்தர்கள் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த துயரச் சம்பவம் குறித்து முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த அதிர்ச்சியையும், வேதனையையும் வெளிப்படுத்தியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களுக்கு விரைவான மற்றும் முறையான சிகிச்சையளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட உள்ளூர் அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இந்தச் சம்பவம் குறித்து “மிகுந்த மன உளைச்சலில்” இருப்பதாகக் கூறியதுடன், உடனடி நிவாரண நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டு, தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த கோவில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், கார்த்திகை மாதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யவும், முறையான வரிசை முகாமைத்துவம், போதுமான பொலிஸ் பாதுகாப்பு மற்றும் மருத்துவ முகாம் ஏற்பாடுகளைச் செய்யவும் அறநிலையத்துறைக்கு அவர் அறிவுறுத்தினார்.