இந்தியத் தமிழர் அல்லது இந்திய வம்சாவளி மக்கள் என்று அறியப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் எண்ணிக்கை, 2024 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 830,000 இலிருந்து 600,000 ஆகக் குறைந்துள்ளது.
2024 கணக்கெடுப்பின்படி மலையகத் தமிழரின் எண்ணிக்கை 600,360 ஆகும். 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இது 839,504 ஆகப் பதிவாகி இருந்தது.
நாட்டின் மொத்த சனத்தொகையில் மலையகத் தமிழர்கள் 2.8 வீதம் உள்ளனர். மலையகத் தமிழ் மக்களின் தொகையில் கிட்டத்தட்ட அரைவாசிப் பேர், அதாவது 300,000 இற்கும் அதிகமானவர்கள், நுவரெலியா மாவட்டத்தில் வசிக்கின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில், இச்சமூகமே பெரும்பான்மையாக உள்ளது. சிங்களவர்கள் 38.9 வீதமாகவும், முஸ்லிம்கள் 2.7 வீதமாகவும் உள்ளனர். சதவீத அடிப்படையில், நுவரெலியாவில் மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை 300,180 ஆகும். அடுத்தபடியாக அதிக எண்ணிக்கை பதுளையில் 11 வீதம் பதிவாகியுள்ளது. கண்டி மாவட்டத்தில் சுமார் 2.6 வீதம் உள்ளனர்.
சனத்தொகைக் கணக்கெடுப்பின் அறிக்கையில் இந்த வீழ்ச்சிக்கான காரணங்கள் விளக்கப்படவில்லை என்றாலும், பலர் தங்களை ‘இலங்கைத் தமிழர்’ அல்லது ‘இலங்கையர்’ என அடையாளப்படுத்தியிருக்கலாம். பலர் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக மேற்கு ஆசிய நாடுகளுக்கு, வேலைவாய்ப்புக்காகக் குடிபெயர்ந்திருக்கலாம்.
என சில வட்டாரங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. இதேவேளை முஸ்லிம் சோனகர் மக்களின் எண்ணிக்கை 2012 இல் 1.892 மில்லியனில் இருந்து 2.283 மில்லியனாக அதிகரித்துள்ளது. இவர்கள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 10.5 வீதமாக உள்ளனர் (2012 இல் 9.3 வீதம்).
இவர்களின் வருடாந்த வளர்ச்சி விகிதம் 1.5 வீதம் ஆகும், இது நாட்டின் மொத்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை விட மூன்று மடங்கு அதிகம். மன்னார் மாவட்டத்தில் இவர்களின் சதவீதம் 2012 இல் 16.5 வீதமாக இருந்ததிலிருந்து 26.5 வீதமாக அதிகரித்துள்ளது.
சிங்கள மக்களின் வருடாந்த வளர்ச்சி விகிதம் 0.4 வீதம் ஆகும். இலங்கைத் தமிழர்களில் 70 வீதமானோர் வடக்கு மாகாணத்தில் (யாழ்ப்பாணம், கிளிநொச்சி) மற்றும் கிழக்கு மாகாணத்தில் (மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை) குவிந்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 10.3 வீதமான இலங்கைத் தமிழர்கள் உள்ளனர்.